மேலகுப்பம் யோகாப்பள்ளி சுதந்திர தினவிழாவில் மாணவிகள் அசத்தல்
ஆற்காடு அடுத்த மேலகுப்பம் யோகப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாணவ, மாணவிகள் யோகாசனங்களை செய்துகாட்டி அசத்தினர்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேலகுப்பம் ராமர்கோயில் வளாகத்தில் யோகாசனப் பயிற்சிபள்ளி இயங்கி வருகிறது. இந்த யோகா பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அதில் காலை தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, பள்ளி யோகா மாணவ, மாணவியர்கள் சுதந்திரதின நினைவு மரக்கன்றுகளை மேலகுப்பம் மலைப்பகுதியில் நட்டனர். இதன் தொடர்ச்சியாக மாலை யோகாசனங்கள் செய்முறை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், யோகா மாணவி அத்வைதாராஜாதேவி தலைமையில் மாணவ, மாணவிகள் கரண்பீடாசனம், கபோதாசனம், வஸிஷ்டாசனம் உள்ளிட்ட பல யோகாசனங்களை செய்து காட்டினர். முன்னதாக அத்வைதாராஜதேவியின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
பின்னர் மாணவி தீபிகா யோகாசனங்களின் சிறப்புகள், அவசியம் குறித்து விளக்கிப் பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் யோகாசிரியர் வேதாத்திரியன் தொகுத்து வழங்கினார் .
நிகழ்ச்சியில், அனைத்துப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் கிராமப்பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.