அனுமதியின்றி மது மற்றும் கள் விற்பனை: 3 பேர் கைது...

சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு, கள் இறக்குதல் மற்றும் அனுமதி இல்லாமல் அரசு மதுபானம் விற்பனையை தடுக்க போலீஸ் நடவடிக்கை

Update: 2021-03-30 12:21 GMT

ராணிப்பேட்டை  மாவட்டம் முழுவதும் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு, கள் இறக்குதல் மற்றும் அனுமதி இல்லாமல் அரசு மதுபானம் விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் ஆணை பிறப்பித்திருந்தார்.

ஆட்சியரின் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை உதவி ஆணையர் (கலால்) சத்தியவிரசத் அவர்களின் தலைமையில் மாவட்ட கலால் மேலாளர் முருகன் மற்றும் கலால் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்ரா தலைமையிலான காவல்துறையினர், ராணிப்பேட்டை உட்கோட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அடங்கிய காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டுள்ளனர்.

வாழைப்பந்தல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சொரையூர் மற்றும் பொன்னம்பலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டதில் சட்டவிரோதமாக கள் இறக்கும் தொழில் நடைபெற்று வருவதை கண்டுபிடித்து 1445 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாடி ஜிஎம் நகர் மற்றும் ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரை ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் அரசு மதுபானம் விற்று வந்த புதுப்பாடி ஜிஎம் நகரைச் சேர்ந்த சின்னப்பொண்ணு, காரை பகுதியைச் சேர்ந்த ராணி மற்றும் மூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 135 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News