ஆற்காட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம்
ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை அமைப்பினருக்கு வழங்கினார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற மே 5ஆம் தேதி வணிகர் தின 39 வது மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாகவும் இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார் . மேலும் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை உயர்த்த ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர் அவ்வாறு பெட்ரோல் ,டீசல் விலை உயர்த்தப்பட்டால் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என்றும் அதற்கு வணிகர்கள் பொறுப்பல்ல என தெரிவித்தார்.
நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான கடைகளில் 300 சதவிகிதத்திற்கும் அதிகமான வரி கடந்த ஆட்சிக்காலத்தில் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்தார் .எனவே நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான கடைகளில் வரியை குறைக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.