கண்ணில் இருந்து எறும்பு வெளியேறும் மர்மம்: விநோதமான பாதிப்பால் மாணவி அவதி

ஆற்காடு அருகே விநோத பாதிப்பால் 9-ம் வகுப்பு மாணவி அவதிப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-05 16:11 GMT

வினோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியர் காண்டீபன் பூங்கொடி. இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இவர்களது மகள் ஷாலினி (வயது14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார். திடீரென கடந்த ஒரு ஆண்டாக அவரது வலதுபுற கண் வீக்கமடைந்தது.

பின்னர் நாளடைவில் கண்களிலிருந்து தொடர்ச்சியாக நாளொன்றுக்கு 15க்கும் மேற்பட்ட எறும்பு போன்ற புழுக்கள் வரத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாலினியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக விநோதமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஷாலினியை பல்வேறு கண் மருத்துவர்களிடம் பரிசோதனை செய்த போதிலும் பரிசோதனைகளில் அனைத்தும் இயல்பான முறையில் இருப்பதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாலினி கண்களில் எறும்பு போன்ற புழுக்கள் தொடர்ச்சியாக வருவதால் ஷாலினி இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமல் படிக்க முடியாமலும் மிகவும் மனவலியுடன் வாழ்ந்து வருகிறார். தனது பெண் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை பாதிப்பினை எவ்வாறு சரி செய்வது என தெரியாமல் அவரது தாயார் பூங்கொடி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் முகாமிற்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் உதவ வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கினார்.

இந்த மனுவினை பெற்ற கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு மருத்துவர்களிடம் மாணவி ஷாலினியை பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாணவி ஷாலினி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விநோத பாதிப்பால் மாணவி அவதிப்பட்டு வரும் சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News