விஷாரம் அருகே பைக்கில் கஞ்சா கடத்திய ரவுடி கைது
விஷாரத்திலிருந்து பைக்கில் கஞ்சா கடத்தி வந்த ரவுடியை ஆற்காடு போலீஸார் கைது செய்தனர்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விஷாரத்திலுள்ள கத்தியவாடி ரோட்டில் போதையில் ஒருவர் வேகமாக பைக் ஓட்டி அப்பகுதியில் உளளவர் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றதாக ஆற்காடு போலீஸாருக்குத் தகவல் வந்தது.
அதற்கிடையில் விஷாரம் ஹக்கீம் காலேஜ் அருகே ஆற்காடு சாலையில் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீஸார் வாகன சோதனைையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இளைஞரை மடக்கி சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில் அவன் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் என்றும் பிரபல ரவுடி மற்றும் கஞ்சா வியாபாரி என்பதும் தெரியவந்தது. அவன்தான் கஞ்சா போதையில் விஷாரம் பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு வந்தவன் என்பதை அறிந்த போலீஸார் பைக்கை சோதனை செய்தபோது கஞ்சா கடத்தி வந்திருப்பதை கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆற்காடு போலீஸார் கைது செய்து அவனிடமிருந்த 1கிலோ கஞ்சாவையும் கடத்தலுக்குப் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ரவுடி புவனேஷ் ஆந்திராவிலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து சிறு,சிறு, பொட்டலங்களாக்கி ஆற்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏஜன்டுகளின் மூலம் கல்லூரி,பள்ளி மாணவர்கள் மற்றும் பலரிடம் விற்பனை செய்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.