ஆற்காடு அருகே சாத்தூரில் ஊரக வேலை செய்யும் பெண்கள் சாலை மறியல்

சாத்தூர் கிராமத்தில் ஊரக நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் கையெழுத்து பெறாமல் வேலைவாங்கிய அதிகாரிகளை கண்டித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-02-26 08:24 GMT

ஆரணி - ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் 

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தசாத்தூர் கிராமத்தைச்சேர்ந்த பெண்கள்500க்கு மேற்பட்டோர் நீண்ட நாட்களாக தேசிய ஊரக வேலை வழங்கும் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பணியாளர்களிடம் கையெழுத்து எதுவும் வாங்காமலேயே வேலை வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு தலைவரிடம் பேசுமாறு அவர்களை தவிர்த்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று  காலை பிரதான சாலையான ஆற்காடு-ஆரணி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். .

இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு கிராமிய காவல் நிலையப் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆயினும் அதற்கு உடன்படாத பெண்கள் மறியலைத் தொடர்ந்தனர் .

மறியல் காரணமாக முக்கிய சாலையான ஆற்காடு-ஆரணி சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

இந்நிலையில் ஆற்காடு ஒன்றிய வட்டாரவளர்ச்சி அலுவலர் செந்தாமரை, மற்றும் இராணிப்பேட்டை துணைகாவல் கண்காணிப்பாளர் பிரபு ஆகியோர் சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் விரைவில் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதனைத்தொடர்ந்து அமைதியடைந்த பெண்கள் அனைவரும் மறியலைக் கைவிட்டனர். சுமார் 2 மணிநேரமாக நடந்த சாலை மறியலில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அனைத்தும்  நின்றது.  மேலும் மறியல் காரணமாக பள்ளிக்கு, அலுவலகத்திற்கு மற்றும் அவசரப்பணிக்கு செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News