ராணிப்பேட்டை: தக்காளி பெட்டிகளில் கடத்திய 1920 மது பாட்டில் பறிமுதல்!

ராணிப்பேட்டையில் தக்காளி பெட்டிகளுக்கிடையே மறைத்து வைத்து கடத்த முயன்ற 1920 கர்நாடக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-27 09:08 GMT

கோப்பு படம்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான தக்காளி கொண்டு வரும் லாரிகள் மூலம் தக்காளி பெட்டிகளுக்கு இடையே மறைத்து கடத்தி வரப்பட்ட நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான 1920 கர்நாடக அரசு மதுபாட்டில்களை ஊரடங்கு நேரத்தில் போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதிக்கு சிலர் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகள் மூலமாக வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆற்காடு பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரிக்கு எதிரே ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக தக்காளி லோடு ஏற்றி வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் அரசு மதுபான பாட்டில்கள், தக்காளி பெட்டிகளுக்கு நடுவே மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

அந்த லாரியை தொடர்ந்து தக்காளி ஏற்றி வந்த அடுத்த லாரி மற்றும் வேனை மடக்கி போலீசார் சோதனையிட்ட போது அதிலும் தக்காளி பெட்டிகளுக்கு நடுவே கர்நாடக அரசு மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக இரண்டு லாரி மற்றும் ஒரு வேனை ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற போலீசார், தக்காளி பெட்டிகளை முழுவதுமாக கீழே இறக்கி லாரியை முழுவதுமாக சோதனையிட்டனர்.

மொத்தமாக கடத்தி வரப்பட்ட 4 லட்சம் மதிப்பிலான 1,920 மதுபான பாட்டீல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வேனின் உரிமையாளர் தாஜ்புரா பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் ஓட்டுநர் ராமநாதபுரம் மோட்டூர் பகுதியை சேர்ந்த விஜய், மற்றும் மற்றொரு லாரியை ஓட்டி வந்த ஆற்காடு கொல்லபாளையம் பகுதியை சேர்ந்த சங்கர்(35) ஆகியோரை ஆற்காடு நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு மதுபான கடைகள் மூடப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக மதுபானங்களை வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி செல்வது போல் ஜோடித்து அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல் துறையினரை ஏமாற்றி எளிதாக மதுபானங்களை கடத்தி வந்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும், கடத்தலுக்கு மூன்றுக்கும் மேற்பட்ட சரக்கு வேன்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வெளிமாநில மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 சரக்கு லாரிகள் மற்றும் ஒரு வேனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News