தமிழகத்தில் 40 லட்சம் டன் அரிசி கொள்முதல் : உணவுத்துறை அமைச்சர் தகவல்
புதிய குடும்ப அட்டை வேண்டி பெறப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களில் 3.5 லட்சம் அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்;
தமிழகத்தில் 40லட்சம் மெட்ரிக். டன் அரிசி கொள் முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கிருஷ்ணாவரத்தில் உள்ள அரிசி ஆலையில், நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசியில் உள்ள கருப்பு அரிசி அகற்ற நோக்கில், அதை நீக்கும் இயந்திரம் பொருத்தும் பணிகளை, இன்று மாநில நுகர்பொருள் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அவருடன்,கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், தமிழகத்தில், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசிகளில் கருப்பரிசி இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதனை நிரந்தரமாக நீக்குவதற்கு அரிசி ஆலைகளில், கருப்பு அரிசி நீக்கும் இயந்திரம் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க துறை சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு மொத்தமாக 44லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது . இதுவரை 40 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், புதிய குடும்ப அட்டை வேண்டி இதுவரை 7 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டத்தில், 3.5 லட்சம் நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் அவர் .