போலி வருமானவரி ரெய்டு; ரூ.6 லட்சம் 'அபேஸ்' செய்த மர்ம நபர்களுக்கு வலை
ஆற்காட்டில் தொழிலதிபரிடம் வருமானவரி அதிகாரிகள் போல நாடகமாடி ரூ.6 லட்சம் அபேஸ் செய்த மர்ம கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர்,ஆட்டோ கன்சலட்டிங் , பைனான்ஸ் மற்றும் தனியார் பாலிடெக்னிக்கல்லூரியின் பங்குதாதரராக உள்ளார்.
இந்நிலையில், தொழிலதிபரான கண்ணன் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்துள்ளனர். அவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும் சோதனையிட வந்துள்ளதாக கண்ணனிடம் தெரிவித்தனர்.
அதனை நம்பிய அவரும் அவர்களை சோதனையிட அனுமதித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, சுமார் 2மணி நேரமாக சோதனையிடுவது போல நாடகமாடியுள்ளனர். பின்னர், அவர்கள் கண்ணனிடம் கணக்கில் குளறுபடிகள் இருப்பதாகவும் நடவடிக்கை கள் எடுக்காமல் இருக்க ரூ.6 லட்சம் லஞ்சமாக வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
உடனே கண்ணன் ரூ.6 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தைபெற்றுக் கொண்ட அந்த கும்பல், ஒரு வாரத்தில் தகவல் வரும் என்று கூறி அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனை நம்பியிருந்த கண்ணன் ரெய்டு நடத்தி ஒருவாரத்திற்கு மேலாகியும் எந்த தகவலும் கிடைக்காதநால் சந்தேகமடைந்த கண்ணன் நடந்த சம்பவம் குறித்து ஆற்காடு போலீசில் புகார்செய்தார்.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து கண்ணன் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி.,யில் பதிவானவைகளை வைத்து வருமான வரி அதிகாரிகள் போல நடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.