ஆணையர் தணிக்கைக்கு செலவு இத்தனை கோடியா?
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிதி ரூ.33.14 கோடியை ஆணையர் பொதுநல நிதி மற்றும் தணிக்கைக்கு செலவிட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் கோயில் நிதி செலவிடப்பட்ட விபரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு அறநிலையத்துறை பதிலளித்ததன் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, புனித நீராடல் மற்றும் தரிசன கட்டணம், பிரசாதம், கோடி தீர்த்தம் விற்பனை என ஆண்டிற்கு ரூ.30 கோடி வருவாய் கிடைக்கிறது.
ஆனால் இந்த நிதியில் ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படுவதில்லை.கழிப்பறை, ஓய்வறை, அக்னி தீர்த்த கடற்கரையில் உடைமாற்றும் அறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் அறநிலையத்துறை செய்து தரவில்லை. இந்நிலையில் மதுரை மாவட்டம் ஆலயம் காப்போம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.தினகரன், ராமேஸ்வரம் கோயில் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேள்வி அனுப்பினார். இதற்கு ஹிந்து அறநிலைத்துறை அளித்த பதிலில், '2021 முதல் 2023 வரை கோயில் நிதி ரூ.10.02 கோடியை ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் பொதுநல நிதிக்கு அனுப்பியதாகவும், பரிசீலனை கட்டணம், தணிக்கை கட்டணம் என ரூ. 23.12 கோடி செலவிட்டதாகவும்' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தினகரன் கூறியது: ஆணையர் பொதுநல நிதிக்கு அனுப்பிய தொகை எதற்கு செலவிடப்பட்டது. பரிசீலனை மற்றும் தணிக்கை செலவுகள் விபரம் குறித்து ஹிந்து அறநிலையத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.