'ஒன்றிய அரசு' என பாடபுத்தகங்களில் அச்சிட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எதிர்ப்பு
முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பிரிவினையை ஏற்படுத்துவது பேசுவது தவறான முன் உதாரணமாக அமையும். பாட புத்தகத்தில் ஒன்றிய அரசு என்று பெயர் மாற்றம் செய்யும் எண்ணத்தை தமிழக அரசு கை விட வேண்டும்
'ஒன்றிய அரசு' என பாடபுத்தகங்களில் அச்சிட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது .
தமிழக பாட நூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பாட நூல்களில் இனி மத்திய அரசு என்ற சொல்லை ஒன்றிய அரசு என மாற்றி அமைக்கபடும் என்று தெரிவித்து இருப்பது மிக பெரிய பிரிவினை வாதத்தை முன் வைப்பது போல் உள்ளது என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினர் இராமநாதபுரத்தை சேர்ந்த சிவபாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒருங்கிணைந்த இந்தியாவில்,முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் இதுபோன்று பிரிவினையை ஏற்படுத்துவது போன்று பேசுவது தவறான முன் உதாரணமாக அமையும். மேலும், பாட புத்தகத்தில் ஒன்றிய அரசு என்று பெயர் மாற்றம் செய்யும் எண்ணத்தை தமிழக அரசு கை விட வேண்டும். இல்லையென்றால் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவ மாணவிகள் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்படும் என சிவபாரதி தெரிவித்துள்ளார்.