தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை.;

Update: 2021-09-02 15:16 GMT

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் 11.09.2021 அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரித்தல் தொடர்பாக, இராமநாதபுரம் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா தலைமையில் இன்று அனைத்து துறை அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

தற்போது நிலவிவரும் கொரோனாவைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும், கு.வி.மு.ச. பிரிவு 144-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாலும், பொதுமக்களின் நலன் கருதி 11.09.2021 அன்று பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் இராமநாதபுரம் மற்றும் பிறமாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை. பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள் (5 நபர்களுக்கு மிகாமல்) மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி மற்றும் வாகன முன் அனுமதியை பெற்றும் அரசு அறிவித்துள்ள வழி முறைகளை பின்பற்றியும், உரிய சமூக இடைவெளியை கடைபிடித்தும் மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அனுமதி பெறவிரும்பும் அரசியல் கட்சித் தலைவர்கள் வருகின்ற 07.09.2021-ம் தேதிக்குள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் (collrrmd@tn.nic.in) மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

1. மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வருபவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டும் வரவேண்டும். வாடகை வாகனங்கள் (T-Board) திறந்த வெளிவாகனங்கள் (Open type) இடாடா ஏஸ் (TATA ACE), வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. அஞ்சலி செலுத்த வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பதுடன், ஒலி பெருக்கிகள் ஏதும் பொருத்தி செல்லவோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. அஞ்சலி செலுத்த அனுமதி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்வதுடன், வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தக் கூடாது.

2.மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வரும் தலைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும்.

3.ஒலி பெருக்கி வைத்தல், வெடிபோடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஜோதி ஓட்டம், முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், தலைவர்கள் போன்று வேடமணிந்து வருதல் மற்றும் ஊர்வலமாக வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.

4.மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ப்ளக்ஸ் போர்டுகள்/பேனர்கள் வைக்க அனுமதி இல்லை.

5.மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்த வருபவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மரியாதை செலுத்த வேண்டும்.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு கடந்த ஆண்டைப் போன்றே, இவ்வாண்டும் விழா அமைதியான முறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News