கடன் கேட்டு வருபவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்: டிஆர்ஓ பேச்சு

பொதுத்துறை, தனியார் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர்கள் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2021-10-26 15:45 GMT

பைல் படம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர்கள் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தனியார் மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி முதுநிலை மண்டல மேலாளர் ஸ்ரீராம் வரவேற்புரையாற்றினார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முகாமை துவக்கி வைத்து பேசினார்.

மாவட்ட அளவில் அனைத்து வங்கிகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வழங்கப்படும் கடனுதவிகள், வங்கிகளின் சேவைகள் குறித்து ஸ்டால்கள் அமைத்திருந்தனர். சமூக பாதுகாப்பு திட்டங்களான பிரதம மந்திரி பீமா யோஜனா, அடல் பென்ஷன் போஜனா போன்ற திட்டங்களில் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் இணைவதற்காக சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. முகாமில் விவசாயகடன், அரசு மானியத்துடன் கடன், சிறுகுறு நடுத்தர தொழில் கடன், முத்ரா கடன் என 400 பயனாளிகளுக்கு 21கோடியே 13லட்சத்து 49ஆயிரம் கடன் வழங்கப்பட்டது.

பயனாளிகளுக்கு கடன் காசோலைகளை வழங்கி எம்எல்ஏ பேசுகையில், கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரமின்றி சிரமப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் அதிகமான அளவில் தொழில்கடன்கள், கல்விக் கடன்களை வழங்க வேண்டும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் பேசுகையில், கல்விக்கடன், தொழில்கடன் கேட்டு வருபவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள், விரைவாக கடன் வழங்குங்கள், வாரந்தோறும் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் வங்கி கடன் வேண்டும் என்ற மனுக்கள் தான் அதிக அளவில் வருகிறது என்றார். பாரதஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் மாருதிராவ் மற்றும் அரசு துறை வங்கி மேலாளர்கள், அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் நன்றியுரையாற்றினார்.

Tags:    

Similar News