இராமநாதபுரம் விமானப்படை அதிகாரி கொலை வழக்கு. 3 பேருக்கு ஆயுள் தண்டனை
இராமநாதபுரத்தில் விமானப்படை முன்னாள் அதிகாரி கொலையான வழக்கு. 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இராமநாதபுரம் மகா சக்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 64. விமானப் படை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுக்கு பின் வங்கியில் காசாளராக பணியாற்றினார். இவரது மகன் அபிஷே. இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி. இவரது மகள் பவானி. இருவருக்கும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அபிஷே, பவானி பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில் பவானி, கணவரை பிரிந்து வாழ சந்திரசேகர் தான் காரணம் என வீராசாமி கருதினார். இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஜூலை 28ல் இராமநாதபுரம் டி- பிளாக் பகுதியில் சந்திரசேகர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காரில் வந்திறங்கிய வீராசாமி உள்பட 3 பேர், சந்திரசேகரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில், வீராசாமி 55, வாலாந்தரவை நடராஜன் மகன் அருண்குமார் 25, சடையன்வலசை ஆனந்தன் மகன் அருண் பிரகாஷ் 24 ஆகியோர் இக்கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த வழக்கு விசாரணை இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் குற்றவாளிகளான வீராசாமி, அருண்குமார், அருண் பிரகாஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.11 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.