பரமக்குடியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள்-கலெக்டர் ஆய்வு
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.;
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், உரப்புளி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலைப் பண்ணை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மா, கொய்யா, நாவல், புளி, வேம்பு போன்ற பல்வேறு பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
இவ்வாறு பராமரிக்கப்படும் கன்றுகள் குறிப்பிட்ட பருவத்திற்கு வளர்ந்தவுடன் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள குறுங்காடுகள் திட்டப் பணிகளில் நடவு செய்யப்பட்டு பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குறைந்த விலையில் மரக்கன்றுகள் விற்பனையும் செய்யப்படுகிறது. அதேபோல, சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தி பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கிலும், நமது மாவட்டத்தில் வளரும் பாரம்பரிய மரக்கன்றுகளை மீட்கும் நோக்கிலும் உரப்புளி கிராமத்தில் "பாரம்பரிய மரங்கள் சரணாலயம்" செயல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மஞ்சள் கடம்பு, பரம்பை, குமிழ், மலை அரளி, இச்சி மரம், நாட்டு அத்தி, நறுஉளி, பதிமுகம், பன்னீர், இலுப்பை, கருவாகை, கள்ளி மந்தாரை, வெண் மந்தாரை, ருட்ராட்சம், பூ மருது, நீர் மருது, மகிழம்பு, புங்கன், புன்னை உள்ளிட்ட 133 வகையான பாரம்பரிய அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அந்தவகையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் இத்திட்டப்பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றுகள் பராமரிப்பு குறித்து அலுவலரிடம் கேட்டறிந்தார்.