தரைப்பாலம் உடைந்ததால் பரமக்குடி - எமனேஸ்வரம் இடையே போக்குவரத்து துண்டிப்பு
பரமக்குடி வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் உடைந்ததால் பரமக்குடி - எமனேஸ்வரம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக வைகை அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் சென்றது போக வைகை ஆற்றில் சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது.
வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால் பரமக்குடி - வைகை நகரை இணைக்கும் தரைப்பாலம் உடைந்தது. அதேபோல் பரமக்குடி - எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் தரைபாலத்தின் மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் பரமக்குடி - எமனேஸ்வரம் இடையிலான தரைபாலத்தின் மீதான போக்குவரத்து பேரிகார்டல்கள் வைத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பரமக்குடியில் இருந்து 2 கிலோமீட்டர் சுற்றி எமனேஸ்வரம், இளையான்குடி, நயினார்கோவில், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கிறது.
வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் செல்லும் நிலையில் கால்நடைகள் அதிக அளவு தண்ணீரில் ஆற்றை கடக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.