இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதியில் இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட எஸ்பி., கார்த்திக், முன்னிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி அலுவலர்களுடன் நேரடியாக கள ஆய்வு செய்து பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருந்த நபர்களுக்கு உடனடி அபராதம் விதித்திட உத்தரவிட்டார். பரமக்குடி பேருந்து நிலையம், நேதாஜி ரோடு, வைசியர் வீதி, இராஜாஜி தெரு,பெரிய கடை வீதி, அங்காளம்மன் தினசரி காய்கனி மார்க்கெட், காந்திஜி ரோடு, ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
கட்டாயம் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளிகளை கடைபிடித்தல், சோப்பு கொண்டு கைகழுவுதல் அல்லது சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாஸ்க் அணியாதோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோருக்கு தனிநபர் அபராதமாக ரூ.200- ம், கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத கடைகள், திருமண மண்டபங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.5000-ம் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.