அங்கன்வாடி குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டைகள் விநியோகம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடலாடி அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி

Update: 2021-07-07 11:58 GMT

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கெட்டுப்போன முட்டைகள் விநியோகித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே சிறைக்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆய்க்குடி அங்கன்வாடி மையத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 20 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அங்கன்வாடி மையங்களில் முட்டை உள்ளிட்ட சத்துணவை சமைத்து வழங்குவது வழக்கம்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடியிருப்பதால் ஊட்டச்சத்து பொருட்களான அரிசி, பருப்பு , முட்டை உள்ளிட்டவைகளை உலர் பொருட்களாக குழந்தைகளின் வீடுகளுக்கே கொடுத்து அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில், ஆய்க்குடி அங்கன்வாடி மையத்தில் பயிலும் 20 குழந்தைகளுக்கு 10 முட்டைகள் வீதம் 200 முட்டைகள் அங்கன்வாடி பொறுப்பாளரால் வழங்கப்பட்டுள்ளது. இதில் 120 முட்டைகள் பயன்படுத்த முடியாதபடி அழுகி கெட்டுப்போய் இருந்தது.

அழுகியப்போன முட்டைகளை உடைத்து பார்க்காமல் அவித்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் ஏதாவது விபரீதம் நடந்திருக்கும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர் பாஸ்கரன் கூறுகையில், ஆய்க்குடி அங்கன்வாடி மையத்தில் அழுகிய முட்டைகளை வழங்கி குழந்தைகளின் உயிருடன் விளையாடியுள்ளனர். இதற்கு காரணமான அங்கன்வாடி பொறுப்பாளர், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோர் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News