இராமநாதபுரம் மாவட்டத்தில் 504 ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் கைது: போலீசார் அதிரடி

தமிழகத்தில் பழிக்குபழி சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவதை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2021-09-26 14:03 GMT
தமிழகத்தில் பழிக்குபழி சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவதை தொடர்ந்து, தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி குறிப்பாக தென் மாவட்டங்களில் பழிக்கு பழி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை சிறப்பு பணியாக மேற்கொண்டு தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளவர்கள், சிறையில் இருந்து வெளிவந்தவர்கள், குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்று சந்தேகிப்பவர்கள், குற்ற வரலாற்று பதிவேடு உள்ளவர்கள் போன்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் அதிரடி சோதனை நடைபெற்றது.

மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் அதிரடியாக சென்று பழிக்குபழி சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனரா. இதற்காக எதுவும் ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா, வெடிகுண்டு உள்ளிட்டவைகளை வாங்கி வைத்துள்ளனரா என்று துருவி துருவி சோதனையிட்டனர். மேற்கண்ட நபர்கள் தற்போது எங்கு உள்ளனர். என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது போன்ற விபரங்களையும் சேகரித்தனர். காலை முதல் நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான போலீசார் சீருடையிலும், சீருடை அணியாமலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில் சிலரின் வீடுகளில் அரிவாள், கத்தி, நீண்ட வாள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 504 ரவுடிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 271 பேர் மீது சரித்திர பதிவேடுகள் துவக்கப்பட்டு தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆயுதங்கள் கண்டறியப்பட்டால் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரின் குற்ற பின்னணி குறித்து ஆராய்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் மாவட்ட எஸ்பி கார்த்திக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News