தமிழகஅரசு எப்படி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய முடியும் என பரமக்குடியில் கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டார். இதில் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, அப்துல்லா, மானாமதுரை சட்டமன்ற பொறுப்பாளர் சஞ்சய் காந்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து கார்த்திக்சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்: கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாடு ரிசர்வ் வங்கியிடம் உள்ளது. தமிழக அரசு எப்படி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய முடியும் என்ற சந்தேகம் உள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் கடனை அடைக்க போகிறார்களா அல்லது கடனை ரத்து செய்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
வெளிநாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் செஸ் வரி விதிப்பால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் கஜானா காலியானது. அதனை சரி செய்வதற்காக மக்கள் மீது செஸ் வரி செலுத்தி பணத்தை மீட்கின்றனர்.எம்ஜிஆர் நிறுவிய உண்மையான அதிமுக தற்போது இல்லை. முழுக்க முழுக்க பாஜகவிற்கு பினாமியாக உள்ள அதிமுகவாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என கூறினார்.