ரஜினிக்கு ரத்த நாளத்தில் வீக்கம்; மருத்துவ சிகிச்சையில் நடந்தது என்ன?
நடிகர் ரஜினிகாந்த சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.;
இது வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் என்று, அவருடைய ரசிகர்கள் என்று நினைத்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்'' எனப் பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டுமென்று ட்வீட் செய்து வந்தனர்.
இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், 'இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சரிசெய்யப்பட்டு விட்டது. ரத்தநாளத்தில் ஏற்பட்ட அழுத்தத்திற்கு stent பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி மூத்த இதய நோய் நிபுணர் சொக்கலிங்கம் கூறியதாவது:
''இதயத்தில் இருந்து ரத்தத்தை வெளியே எடுத்து வருகிற ரத்தக்குழாயின் பெயர் மகா தமனி. எல்லா உறுப்புக்களுக்கும் ரத்தத்தை எடுத்துச்செல்வது இந்த மகா தமனிதான். இதில் ரஜினிக்கு, வயிற்று பாகத்தில் இருக்கிற மகா தமனியின் சுவர்களில் லேசான வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வீக்கம் காரணமாகத்தான் அவருக்கு திடீரென வலி ஏற்பட்டிருக்கிறது. இதற்கான சிகிச்சையை அறுவை சிகிச்சை இல்லாமல் உடனடியாக செய்திருக்கிறார்கள்.
தொடையும் இடுப்பும் சேரும் பகுதியில் இருக்கிற ரத்தக்குழாய் வழியாக, கதீட்டர் எனும் உபகரணம் வழியாக, ரத்த நாளத்தில் வீங்கிய பகுதியில் ஸ்டன்ட் வைக்கப்பட்டு இருக்கும். இனி ரஜினிக்கு எந்தப் பிரச்னையும் வராது. இரண்டு நாளில் அவர் வீட்டுக்கு சென்று விடலாம். 2 வாரம் முதல் ஒரு மாதம் வரைக்கும் ஓய்வு எடுத்தால் போதும்.'' என்கிறார்.