புரவி புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
புரவி புயலால் பெய்த தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, நெடுவாசல், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி அரசர்குளம் அரிமளம், அன்னவாசல் விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெல் சோளம் மக்காச்சோளம் உளுந்து, நிலக்கடலை, கரும்பு வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் புயலால் ஏற்பட்ட சேத மதிப்பீடு கணக்கீடு செய்ய நேற்று இரவு தமிழகம் வந்த மத்திய குழுவினர் இன்று மதியம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலங்குடி அருகே உள்ள கத்தக்குறிச்சியில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய வருகை தந்தனர். 8 பேர் கொண்ட மத்திய குழு கத்தக்குறிச்சியில் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த பயிர்களின் புகைப்படங்கள், சேதமடைந்த பயிர்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக ஆய்வு செய்து வேளாண் துறையினரிடம் எது மாதிரியான சேதத்தை புதுக்கோட்டை மாவட்டம் சந்தித்து உள்ளது என்பதை கேட்டறிந்தனர்.
புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில்:- விவசாயிகள் ஏற்கனவே மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறோம். மேலும் புரவி புயலால் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்துள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது எனவும் தற்போது மத்திய குழு பாதிக்கப்பட்ட பயிர்களைக் பார்வையிட்டு சென்றுள்ளனர் பெயரளவுக்கு பார்வையிட்டு செல்லாமல் தங்களின் நிலையை எடுத்துக்கூறி சேதமடைந்த விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் பெற்றுத் தர வழிவகை செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் முழுமையான நிவாரணம் வழங்கவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.