பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளை - தொடரும் பயங்கரம்

கடந்த 20 நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பட்டப்பகலில் நான்கு வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-12-25 18:26 GMT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள ஆவூர் அருகே விவசாயின் வீட்டு பூட்டை உடைத்து பட்டப்பகலில் 35 சவரன் நகை மற்றும் 4.72 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்படுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள அவூர் அருகே உள்ள ஆம்பூர்பட்டி நால்ரோடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் விவசாயம் மற்றும் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இவரது மகன் ரகுபதிக்கு திருமணம் நடந்த நிலையில் அவருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகள் ,கல்யாணத்தில் வந்த மொய் பணம் மற்றும் மாட்டு வியாபாரம் செய்வதற்காக பழனிச்சாமி வைத்திருந்த ரூ 4.72 லட்சம் பணம் ஆகியவற்றை அவர் தனது வீட்டிலிருந்த பீரோவில் பூட்டி வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பழனிச்சாமி அவரது உறவினர் வீட்டுக்கு சென்று விடவே இன்று காலை அவரது மகன் ரகுபதி மாத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின் காலை 11 மணியளவில் பழனிச்சாமியின் மனைவி ரேணுகா மற்றும் மருமகள் ரம்யா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று தோட்ட வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.

இதனிடையே மாலை 3 மணியளவில் வெளியூர் சென்றிருந்த பழனிச்சாமி வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 35 சவரன் நகை மற்றும் 4.72 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து பழனிசாமி மாத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த போலீசார் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியோடு இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் விவசாயின் வீட்டு உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 நாட்களில் மாத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பட்டப்பகலில் நான்கு வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News