பெண்கள் மீதான உளவியல் வன்முறைகள்: இந்த விஷயங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது

உளவியல் வன்முறைகளில் சிக்காத பெண்களே இல்லை என்கிற அளவிற்கு சமூகத்தின் சூழல் மாற்றமடைந்துள்ளது.

Update: 2022-04-05 02:56 GMT

இன்றைய சூழலில் பெண்கள் தொடாத இலக்குகளே இல்லை. ஏன் சில விஷயங்களில் ஆண்கள் எட்ட முடியாத இலக்குகளை கூட பெண்கள் எளிதில் கடந்து விடுகின்றனர். கல்வித்துறையிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும், சாதனை பட்டியலிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் சாதித்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்படி பெண்களின் முன்னேற்றத்தை பார்த்து நாம் வியந்து கொண்டிருக்கும் போது, மனோதத்துவ நிபுணர்கள் எழுப்பும் கேள்விகள் பலரையும் சிந்திக்க வைக்கின்றன. தற்போதய சமூக சூழல் இந்தியாவில் பெண்களை நொடிக்கு நொடி உளவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வருகின்றன. ஆனால் நாம் அத்தனை பேருமே பாலியல் வன்முறைகளை மட்டுமே பெரிதாக பேசுகிறோம். உளவியல் வன்முறைகளை பற்றி பேசுவதே இல்லை என ஒரு உண்மையை போட்டு உடைத்தனர்.

சற்று யோசித்து பாருங்கள்… பெண்கள் மீதான உளவில் வன்முறைகள், நம் வீட்டுப் பெண்களை நம் வீட்டிற்குள் பாதுகாப்பாக வைத்திருக்கும் நேரத்தில் கூட வந்து சம்மட்டி கொண்டு அடிக்கின்றன. இதற்கு பெண்களே உடந்தையாக இருக்கின்றனர் என்பதும் பெரிய மைனஸ் பாயிண்ட் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

அதில் ஒன்று நம் வீட்டு டிவி பெட்டி. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, மாமன், மச்சான், தாத்தா, பாட்டி என அத்தனை பேருடனும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, பெண்களின் உடலில் மாதம் ஒருமுறை ஏற்படும் இயற்கையான மாறுதல்களை கூட வியாபாரமாக்கி, விரசத்துடன் வரும் விளம்பரங்கள் பெண்களின் அடிமனதில் எவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மனோதத்துவ நிபுணர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்கின்றனர். இதேபோல் தான் பெண்களுக்கான உள்ளாடைகள் விளம்பரமும் குடும்பத்திற்குள் பெரும் நெருக்கடியினை ஏற்படுத்துகின்றன. தவிர அழகு, வசதி என்ற இரண்டின் அடிப்படையில் பெண்களுக்கு உருவாக்கப்படும் உடைகளே அவர்களுக்கு பெரும் மைனஸ் பாயிண்டாக அமைகின்றன. தற்போது தாவணி, பாவடை, சேலை தவிர இதர உடைகளை அணியும் பெண்கள், இயற்கை உபாதைகளை அனுபவிக்கின்றனர் என்பதை பெண் டாக்டர்களிடம் கேட்டுப்பாருங்கள் தெரியும் என்கின்றனர். பெரும்பாலும் பெண் டாக்டர்கள் சேலை அணிந்து கொண்டு வெள்ளை கோட்டு போட்டுக் கொள்வார்கள். இது அவர்களுக்கு மிகவும் வசதியான உடைகளாகும். நர்சுகள் அணியும் உடைகள் கூட ஓரளவு ஓ.கே., தான். ஆனால் கல்லுாரி மாணவிகள், பணியிடங்களுக்கு செல்லும் மாணவிகள் அணியும் உடைகள் நிச்சயம் இயற்கை உபாதைகளை கழிப்பதில் பெரும் சவாலை உருவாக்குகின்றன என்பதில் மாற்றுக்கருத்துக்ளே இல்லை.

அடுத்தது ஆம்னி பஸ்கள். ஆம்னி பஸ்களில் குறைந்த பட்சம் பயணம் 7 மணி நேரமாக உள்ளது. அதிகபட்சம் 14 மணி நேரமாக உள்ளது. இந்த பயண நேரத்தின் போது, எந்த ஆம்னி பஸ்களிலாவது பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வசதிகள் செய்து கொடுத்துள்ளார்களாக என்றால் இல்லவே இல்லை… என்று அறுதியிட்டு கூற முடியும். குறிப்பாக ஆம்னி பஸ்களில் பயணிக்கும் பெண்கள் பஸ் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே தங்கள் வீடுகளில் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு புறப்படுகின்றனர். பயண நேரத்தின் போது, நன்றாக கவனித்தால் தெரியும். சேலை அணிந்திருக்கும் பெண்களில் பெரும்பாலானோர், பொதுக்கழிப்பறைகளை எளிதில் பயன்படுத்தி விட்டு திரும்பி விடுகின்றனர். மாடர்ன் டிரெஸ் அணிந்திருக்கும் பெண்களில் பெண்களி்ல் பெரும்பாலானோர் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்துவதில்லை. பயண நேரம் முடியும் வரை குறைந்த பட்சம் 8 மணி நேரம் முதல் அதிகபட்சம் 14 மணிநேரம் வரை அவர்கள் கழிப்பறைக்கு செல்லாமல், அவஸ்தைகளை மறைத்து கொண்டு பயணிப்பது உளவியல் வன்முறையின் உச்சகட்டம். (நடுத்தர குடும்பங்கள் கூட இன்று பொதுப்போக்குவரத்தை தவிர்த்து பணம் செலவானாலும் பரவாயில்லை என காரில் பயணிக்க இதுவே முக்கிய காரணம்). இதற்கு தீர்வு காண ஆம்னி பஸ்களில் பெண்களுக்கு 'ரெஸ்ட்ரூம்' வசதிகள் வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. கேரவன் பஸ்களில் மட்டுமே கழிப்பறை வசதிகள் உள்ளன. ஆனால் கேரவன் பஸ்களை எல்லோராலும் பயன்படுத்த முடியுமா? சற்று யோசித்து பாருங்கள்.

பணியிடங்களில் வேலை பார்க்கும் பெண்கள் படும் பாட்டை சொல்லவே முடியாது. ஜவுளிக்கடை, நகைக்கடைகளில் பணிபுரியும் பெண்கள் துன்பத்தின் உச்சத்திற்கே செல்கின்றனர். பணி நேரம் முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டும். உட்கார அனுமதியில்லை. பல மெட்ரிக் பள்ளிகளிலும் இந்த கட்டுப்பாடுகள் உள்ளன. ஆசிரியைகளும் இதில் சிக்கி சிரமப்படுகின்றனர். இந்த இடங்களில் எல்லாம் ரெஸ்ட் ரூம் வசதிகள் இருக்கும் என்பது ஆறுதலான உண்மை. ஆனால் சிறிய ரக தொழிற்சாலைகள், சிறிய நடுத்தர அளவிலான வணிக நிறுவனங்கள், பலசரக்கு கடைகள், டீக்கடைகள், பேக்கரிகளில் பெண்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. காரணம் இங்கு பணி நேரம் முழுக்க நின்று கொண்டே பணிபுரிய வேண்டும். தவிர இப்படிப்பட்ட நடுத்தர வணிக பயன்பாட்டில் உள்ள 95 சதவீத நிறுவனங்களில் ரெஸ்ட் ரூம் வசதிகளும் இல்லவே இல்லை. இங்கெல்லாம் பெண்கள் படும் பாடு மிகுந்த உளவியல் வன்முறைகளின் உச்சம் தான். சமூகத்திற்கு பாதுகாப்பு வழங்கும் பெண் போலீசார், பேண்ட் சட்டை அணிந்து கொண்டு படும் பாட்டினை விவரிக்க பல பக்கங்கள் எழுத வேண்டியிருக்கும். பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போது அவர்களின் துயரத்தை வார்த்தைகளில் கொண்டு வருவது மிகச்சிரமம். இப்படி பெண்களுக்கு எதிரான வன்முறைக்களங்கள் நம் சமூக வாழ்வியல் மாற்றங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஆனாலும் சமூக மாற்றங்கள், வாழும் மக்களின் மனநிலை மாற்றங்கள், கல்வி வளர்ச்சி, அடிப்படை வசதிகளின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, போக்குவரத்து தொழில் நுட்ப வளர்ச்சிகள் போன்ற விஷயங்களின் தான் பெண்களை இது போன்ற தொல்லைகளில் இருந்து மீட்க முடியும். இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் சமூகத்தில் அத்தனை பேருக்கும் தெரியும். அதாவது அடித்தட்டு மக்கள் முதல் ஆளும் உயர்நிலை வர்க்கம் வரை அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால் யாரும் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் வேதனையின் உச்சம் என மனோதத்துவ நிபுணர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். ஆளும்  அரசுகள்  இந்த விஷயங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது.

Tags:    

Similar News