ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பிரபாகரன்: அடுத்த குண்டை வீசும் திருச்சி வேலுச்சாமி

இலங்கை கடைசி கட்ட போரில் இறந்தது பிரபாகரன் அல்ல. அவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார் என திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-02-15 02:16 GMT

தமிழக காங்., கட்சியை சேர்ந்த திருச்சி வேலுச்சாமி.

2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே இறுதி யுத்தம் நடைபெற்றது. இந்த இறுதி யுத்தத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டனர். அப்போது புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகள் பலரும் கொல்லப்பட்டனர். இந்த இறுதி யுத்தத்தில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என இலங்கை ராணுவம் அறிவித்தது. நீர்நிலை ஒன்றில் பிரபாகரன் உடலை கைப்பற்றியதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்தது.

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருக்கிறார்; பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்; பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை அவரது அனுமதியுடன் உலகத் தமிழர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு ஆஸ்திரேலியாவில் இருக்கலாம் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்," நந்திக் கடலில் மரணம் அடைந்து இரவு முழுவதும் சடலமாக பிரபாகரன் மிதந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. அப்படி மிதந்திருந்தால் அந்த சடலத்தின் கண்கள் மீன்களால் சிதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த சடலத்தின் கண்கள் திறந்த நிலையில் தெளிவாக இருந்தன. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

விடுதலை புலிகளில் யாரும் தங்களது சீருடையில் பெயரை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த பழக்கம் அவர்களிடம் இல்லை. ஆனால், இலங்கை ராணுவம் காட்டிய பிரபாகரன் உடலில் இருந்த சீருடையில் அவரது பெயர் இருந்தது. அதனால் அது பிரபாகரனே இல்லை. அந்த ஏற்பாட்டைச் செய்தவர்கள் ஏதோ நோக்கத்துக்காக செய்துள்ளனர்.

பிரபாகரன் கொல்லப்படவே இல்லை என்பதை 14 ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னேன். பிரபாகரன் உடல் என இலங்கை ராணுவம் காட்டியது அவருடைய உடலே அல்ல. பிரபாகரன் உயிரோடு தப்பி சென்றார் என்பதை அவருக்கு அருகிலேயே இருந்த ஒருவரை சந்தித்த போது உறுதி செய்து கொண்டேன். பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் உயிரோடு ஆஸ்திரேலியாவில் இருக்கலாம் என கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News