மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!

காவல்துறை என்பது கிட்டத்தட்ட ராணுவத்துக்கு இணையான கட்டுக்கோப்புள்ள ஒரு துறை.

Update: 2024-06-18 05:05 GMT

கோப்பு படம் 

காவல் துறை தவிர மற்ற துறைகளில் சங்கம், போராட்டம் எல்லாம் இருக்கும். ஆனால், காவல்துறையில் அவையெல்லாம் இருக்காது. அப்படி சங்கம் அமைப்பதற்கு அங்கே அனுமதியும் இல்லை. இந்த நிலையில், ‘அடிமைத்தனத்திலிருந்து தமிழ்நாடு காவல்துறையை மீட்டெடுக்க வேண்டும். போலீஸ்காரர்கள் கொந்தளிப்பு’ என்ற தலைப்பில், கோயம்புத்தூர், ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்துக்கு 2001-ம் ஆண்டில் ஊர், பெயர், விவரங்கள் குறிப்பிடப்படாமல் மொட்டைக்கடிதம் ஒன்று வந்தது.

இது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறை, கடிதத்தைத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியது. அதன் முடிவில், கடிதத்தில் இருந்த கையெழுத்து பாலச்சந்திரன் என்கிற காவலருடையது என்பதை உறுதிப்படுத்தியது.

தமிழ்நாடு காவல்துறையில் 1994-ம் ஆண்டு பணியில் சேர்ந்த பாலச்சந்திரன் மீது துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார். அங்கே பணிநீக்க உத்தரவு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பாலச்சந்திரன் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, அவருக்கு மீண்டும் போலீஸ் வேலையை வழங்கச் சொல்லியிருக்கிறது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர், பாலச்சந்திரனுக்கு ஆறு வாரங்களுக்குள் போலீஸ் வேலையை மீண்டும் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து இதுவரை ஊதியம் எதையும் அவர் கோர முடியாது. ஆனால், இந்தக் காலத்தை, ஓய்வூதியத்துக்கான கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனையாக பணிநீக்கம் நடைபெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட பணி நீக்கத்தை ரத்துசெய்திருக்கும் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

இது பற்றி சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரி கூறுகையில் ``போலீஸ்காரர்களின் உரிமைகளை மீட்டெடுக்க ஒரு சங்கம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. அது நிறைவேறாதபோது இது போன்ற கடிதங்கள் வருவது சாதாரணம் தான்.

உயரதிகாரிகள் எடுக்கும் முடிவு, அவர்களை பாதிக்காத, அவர்கள் இருக்கும் நிலையிலிருந்து சற்றும் தாழ்ந்துவிடாத வண்ணம் இருக்கும். ஆனால், கீழ்மட்டத்தில் ஊழியர்களாக இருக்கக்கூடிய போலீஸ்காரர்கள், இன்றளவும் பல இன்னல்களுக்கு ஆளாவதை நம்மால் காண முடிகிறது. முக்கியமாக, 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகித தமிழக போலீஸ்காரர்கள் கடும் மனஉலைச்சலில் இருக்கிறார்கள் என்றே கூறலாம். எண்ணிக்கையில் சிறிது மாறுபாடு இருக்கலாம். ஆனால், உண்மை இதுதான்.

இதற்கு, பணி அழுத்தம், அதிகாரத்துக்கு அடிமைத்தனமாக இருக்க வேண்டிய அவசியங்கள், காக்கிச் சட்டைக்கு உரிய மிடுக்கில்லாமல் வளைந்து கொடுக்க வேண்டிய நிலை போன்றவைதான் காரணம். இது போன்ற காரணங்களால் சுயமரியாதையுள்ள மனிதர்களாக கீழ்மட்டப் பதவியிலுள்ள போலீஸ்காரர்களால் இருக்க முடிவதில்லை. பெரும்பாலும் கீழ்நிலைப் பதவிகளில் இருக்கும் போலீஸ்காரர்களுக்குத் தங்களது குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் நேரமும், அவர்களுடன் செலவிடும் நேரமும் மிகக் குறைவு.

எனக்குத் தெரிந்து சென்னை கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் இருக்கும்போது காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர்களின் மன அழுத்தம் குறையும் வகையிலும், அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையிலும், ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்தத் திட்டம் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, கடிதத்தை பாலச்சந்திரன் எழுதியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், காவல்துறையில் பணிபுரியும் பாலச்சந்திரன் போன்றவர்களுக்கே வெளிப்படையாகத் தனது கருத்தைக் கூறுவதற்கு வாய்ப்பு இல்லாத போது, தனிமனிதனால் எவ்வாறு தனது கருத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும்?

சாதாரணமாக ஒரு மொட்டைக்கடிதம் எழுதியதற்காகப் பணிநீக்கம் செய்வது அதிகபட்ச தண்டனை எனக் கருதுகிறேன். அவர் செய்த குற்றத்துக்காக, சிறிது காலம் சஸ்பெண்ட் செய்திருக்கலாம், சம்பளத்தைக் குறைத்திருக்கலாம் அல்லது சம்பள உயர்வை ஓரிரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்திருக்கலாம். ஆனால், பாலச்சந்திரனுக்கு வழங்கியது தவறுக்கேற்ற தண்டனை அல்ல. அதைத்தான் நிவர்த்தி செய்திருக்கிறது உயர் நீதிமன்றம்.

குற்றத்துக்கு ஏற்பவே தண்டனை வழங்க வேண்டும் என்பது நமது சட்டத்தின் குற்றவியல் நடைமுறை. பணிநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் வேலைவாய்ப்பு கோருவதற்குச் சட்டத்தில் பல வழிகள் உண்டு. பலரும் இந்த வழிகளைப் பயன்படுத்திப் பயனடைந்திருக்கின்றனர். இதுவே நமது நீதித்துறையின் மாண்பு” என்றார்.

Tags:    

Similar News