பயணிக்கு நெஞ்சு வலி: அமைச்சா் துரைமுருகன் வந்த விமானம் நாக்பூரில் தரையிறங்கியது
அமைச்சா் துரைமுருகன் வந்த டில்லி-சென்னை ஏா்இந்தியா விமானத்தில் பயணி ஒருவருக்கு உடல்நலம் பாதித்ததால்,விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறங்கியது
டெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 9.40 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 85 பயணிகள் சென்னைக்கு பயணித்து கொண்டிருந்தனா். அந்த விமானம் வழக்கமாக பகல் 12.30 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேரும்.
அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.இதையடுத்து விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு,அவசரமாக நாக்பூா் விமானநிலையத்தில் விமானத்தை தரையிறக்கினாா்.உடல்நலம் பாதிக்கப்பட்ட சென்னை பயணியை விமானத்திலிருந்நது அவசரமாக கீழே இறக்கி, நாக்பூா் விமானநிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
அதன்பின்பு ஏா் இந்தியா விமானம் மீதி 84 பயணிகளுடன் நாக்பூரிலிருந்து பகல் 12.20 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்து சோ்ந்தது.