பெரம்பலூர் மாவட்டத்தில் 1,050 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நல துறை சார்பில் 1,050 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தலைமையேற்று 1,050 பயனாளிகளுக்கு ரூ.21.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் 50,721 தொழிலாளர்களுக்கு ரூ.12,35,20,950 தொகைக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி துவக்கிவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 934 பயனாளிகளுக்கு ரூ.16,70,000 மதிப்பீட்டில் கல்வி உதவிதொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.10,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ.500 மதிப்பீட்டில் கண்கண்ணாடிக்கான உதவித்தொகையும், 12 பயனாளிகளுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ.1,05,000 மதிப்பீட்டில் விபத்து மரண உதவித்தொகையும், 100 பயனாளிகளுக்கு ரூ.1,00,000 மதிப்பீட்டில் ஓய்வூதிய உதவிதொகையும் என மொத்தம் 1,050 பயனாளிகளுக்கு ரூ.21,85,500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, தொழிலாளர் உதவி ஆணையாளர் (ச.பா.தி) முஹம்மது யூசுப், தொழிலாளர் உதவி ஆணையாளர்(அமலாக்கம்) மு.பாஸ்கரன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.