லாரியும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி
பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எதிரே வந்த சரக்குவேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.;
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள கோவிந்தராஜபுரம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் மற்றும் பெரம்பலூர் திருநகரில் வசித்து வருபவர் குணாலன். நண்பர்களான இருவரும் நேற்று இரவு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியிலிருந்து பெரம்பலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் நாற்கரங்கொட்டாய் என்ற இடத்தில் வந்தபோது எதிரே பெரம்பலூரிலிருந்து ஆத்தூர் நோக்கி சென்ற சரக்கு வாகனம் (ஈச்சர் வேன்) மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நண்பர்கள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு, அதன் ஓட்டுனர் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே விபத்து நடந்த இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிந்த போலீஸார் தப்பியோடிய சரக்கு வேனின் ஓட்டுநரை தேடி வருகின்றனர். விபத்து காரணமாக பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.