விடுதலைப் போரில் தமிழகம்: அலங்கார ஊர்தி பெரம்பலூர் வந்தது
காவல்துறையினர் மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையினர் இசை வரவேற்புடன் வரவேற்பு அளித்தனர்.
விடுதலை போரில் தமிழகம் - அலங்கார ஊர்தி சனிக்கிழமை அன்று பெரம்பலூர் வந்தது. பெரம்பலூர் பாலக்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பபட்டிருந்தது. வாகனத்தினை அனைவரும் குடும்பத்துடன் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கண்டுகளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா அழைப்பு விடுத்திருந்தார்.
விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பங்கேற்ற அலங்கார ஊர்திகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களுக்கும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அனுப்பிவைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அடிப்படையில், வஉசி அலங்கார ஊர்தி மற்றும் ஈ.வெ.ரா.பெரியார் அலங்கார ஊர்திகள் அரியலூர் மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு, நேற்று அதிகாலை வருகை தர உள்ளது. அலங்கார ஊர்திகளை மாவட்ட எல்லையான குன்னம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் , மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ,மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் மற்றும் ஒன்றியக்குழுத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
காவல்துறையினர் மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையினர் இசை வரவேற்புடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நேற்று காலை முதல் இரவு வரை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் அலங்கார ஊர்திகளை நிறுத்தி காட்சிப்படுத்தப் பட்டது.
அலங்கார ஊர்தியில் காட்சிப்படுத்தப் பட்டுள்ள விவரம்:-
வ.உ.சி.அலங்கார ஊர்தி
இந்த ஊர்தியில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தனது புரட்சிகரக் கவிதைகளால் விடுதலை வேள்விக்கு வித்திட்டவரும் சுதந்திரத்திற்காக மட்டுமின்றி சமத்துவம், சமூக விழிப்புணர்வு மற்றும் பெண் விடுதலைக்காகப் போராடிய பெரும் புலவன் மகாகவி பாரதியார், ஆங்கிலேயரின் கப்பல் வணிகத்திற்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவரும், எஸ்.எஸ். காலியோ எனும் பிரெஞ்சுக் கப்பலை வாங்கியதால், தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு, இரட்டை தீவாந்திர தண்டனை பெற்றவரும், "செக்கிழுத்தச்செம்மல்" வ.உ.சிதம்பரனார், விடுதலைக்காகப் போராடிய வரும், "ஞானபானு" மற்றும் "பிரபஞ்சமித்திரன்" என்ற பத்திரிகைகளைத் தொடங்கி, தேசத் தலைவர்களின் அரிய தொண்டினை வெளியிட்டு தமிழகத்தில் விடுதலை தாகத்திற்கு வித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா, சுதந்திரப் போராட்டத்திற்காக போராடிய வரும், சமூக சீர்திருத்தவாதியுமான சேலம் விஜயராகவாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
பெரியார் அலங்கார ஊர்தி
இந்த ஊர்தியில், சத்தியாக்கிரக அறப்போராட்டம் நடத்தியவரும், சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும் தீண்டாமையை வேரறுக்க அரும்பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒத்துழையாமை இயக்கம், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட மூதறிஞர் இராஜாஜி, தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற்றிட எந்நாளும் உழைத்திட்ட கர்ம வீரர் காமராஜர், சமூக சீர்திருத்தச் செயல்பாட்டாளர் ரெட்டை மலை சீனிவாசன், கலெக்டர் ஆஷ்துரையை கொன்று தன்னுயிரை மாய்த்துக் கொண்ட வீரன் வாஞ்சிநாதன், அன்னியர்களை வீரமுடன் எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை, கொடி காத்த திருப்பூர் குமரன், விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும் சிறந்த இலக்கியவாதியுமான திருச்சிராப்பள்ளி வ.வே.சு.ஐயர், காயிதேமில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரப் பேராசிரியராகவும் சிறைத் தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாகச் சீலர் கக்கன் ஆகியோரின் புகழினை வெளிப்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்தி பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.