பெரம்பலூர் நகரில் தரம் பிரிக்கப்படும் குப்பைகளால் துர்நாற்றம்
பெரம்பலூர் நகரில் பொது இடங்களில் தரம் பிரிக்கப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.;
பெரம்பலூர் நகரில் பொது இடத்தில் வைத்து குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது.
பெரம்பலூர் நகராட்சி 21 வார்டுகளை கொண்ட நடுத்தர நகராட்சி ஆகும். வளர்ந்துவரும் நகரமான பெரம்பலூரில் நாள்தோறும் சுமார் 50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரமாக மாற்றும் வகையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், ஆத்தூர் சாலை, நெடுவாசல் குப்பை கிடங்கு உள்ளிட்ட சில இடங்களில் இதற்கென தனியாக தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இதே பணிக்காக எளம்பலூர் சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே செயல்பட்டு வந்த வார சந்தை மைதானத்திலும் நகராட்சியின் சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இது போன்ற தொழில் கூடங்களை அமைத்து குப்பைகளை தரம் பிரிக்க ஏற்பாடு செய்யும் பொழுது கால தாமதத்தினால் கொட்டப்பட்ட குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு தொற்று நோய்களை பரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனை கையாளும் நகராட்சி பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, முக கவசம் பாதுகாப்பு உடை போன்ற எதுவும் வழங்கப்படவில்லை மேலும் நகராட்சியில் பணி செய்யும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் எதுவும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.
எனவே நகர பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என்று தரம் பிரித்து பெறுவதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக குப்பைகளை அள்ளி வந்து, அதனை தரம்பிரித்து இயற்கை உரங்கள் தயாரிக்கிறோம் என்ற பெயரில் பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் குப்பைகளை கொட்டி வைத்திருப்பது ஆபத்தானது என்று கூறும், சமூக ஆர்வலர்கள் இதற்கு மாற்று வழிகளை ஏற்படுத்தும் வகையில் நகர பகுதிக்கு வெளியே தனியாக உள்ள பகுதியில் இதுபோன்ற தொழில் கூடங்களை அமைத்து குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரங்களைத் தயாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.