பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் பயிர்க்கடன்: அமைச்சர் சிவசங்கர்
பெரம்பலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது என 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு 68 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
விழாவில் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டியில்லாப் பயிர்க்கடன் நவம்பர் 15 ம் தேதி முடிய ரூ.245.08 கோடி 29,524 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக நடப்பாண்டில் அக்டோபர் 2023 முடிய 41,405 விவசாயிகளுக்கு ரூ.30.22 கோடி மதிப்புள்ள 12975.366 டன் உர விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயிர் கடன், டாம்கோ, டாப்செட்கோ கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கியதில் பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது என்று கூறினார். பேசினார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீனா அண்ணாதுரை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.