பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர்கள் நிலுவை பணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பால் உற்பத்தியாளர்கள் நிலுவை பணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு 4 மாதமாக பால் பணம் வழங்காதது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சங்க மாநில பொதுச் செயலாளர் முகமது அலி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4 மாத காலமாக நிலுவையில் உள்ள பால் பணத்தை வழங்க வேண்டும்,10 தினங்களுக்கு ஒரு முறை பால் பணம் ஆவின் நிர்வாகத்திடமிருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும்,பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மாட்டுத் தீவனம் மானிய விலையில் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த விவசாயிகளின் வாகனங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வழக்கு போடுவதாக கூறியதால் பாலக்கரை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.