பெரம்பலூர் நாட்டார் மங்கலத்தில் புதிதாக உருவான முருங்கை மரத்து அருவி
பெரம்பலூர் அருகே நாட்டார் மங்கலத்தில் புதிதாக உருவான முருங்கை மரத்து அருவியில் இளைஞர்கள் உற்சாக குளியல் போடுகின்றனர்.;
பெரம்பலூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் முருங்கை மரத்து அருவியில் உற்சாகமாக குளியல் போடும் இளைஞர்கள்.
பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் அருகேயுள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள ஈச்சங்காடு பகுதி வடக்கு மலையில் அருவி ஒன்று உருவாகியுள்ளது. செங்கமலையார் கோயில் அடிவாரத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் மலை அடிவாரப்பகுதிக்கு சென்றால் இரண்டு மலை நடுவே அந்த அருவி தென்படுகிறது.
இதனை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சென்று பார்த்து தெரிவித்ததன் பேரில் நாட்டார்மங்கலம்,மருதடி,ஈச்சங்காடு,இரூர் மற்றும் செட்டிக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் வந்து உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.அந்த இடத்தில் மலை முருங்கைமரம் ஒன்று உள்ளதால் இந்த அருவிக்கு முருங்கைமரத்து அருவி என்று பெயர் வைத்து அழைக்கும் இளைஞர்கள்,தற்பொது பெய்து வரும் தொடர்மழையினால் இந்த அருவி உருவாகியுள்ளது.என்றும் ஆர்ப்பரித்துக் கொண்டு தண்ணீரில் குளிப்பது ஆனந்தமாக உள்ளது என்றும்,இவ்வளவு நாட்களாக இப்படி அருவி இருப்பது தெரியவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த அருவிக்கு செல்ல சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சற்று கரடு முரடான பாதையில் நடந்தே செல்ல வேண்டும் என்று தெரிவிக்கும் இளைஞர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் மயிலூற்று அருவி,கோரையாறு அருவி, அத்தி அருவி , இரட்டைப் புறா அருவியை தொடர்ந்து நாட்டார்மங்கலம் அருவியிலும் தண்ணீர் கொட்டுவது மகிழ்சியளிப்பதாகவும்,இந்த பகுதிக்கு சென்று வர பாதுகாப்பான பாதை வசதி செய்து தரவேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.கடந்த சில தினங்களாக இந்த அருவிக்கு இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர்.