பெரம்பலூர்: மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களுக்குட்பட்ட பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி. உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
பெரம்பலூர் ஒன்றியத்திற்கு 10.03.2022 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி பெரம்பலூரிலும், வேப்பூர் ஒன்றியத்திற்கு 11.03.2022 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி வேப்பூரிலும், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு 16.03.2022 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி பாடாலூரிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு 17.03.2022 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி வெங்கலத்திலும் நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் சிறப்பு மருத்துவர்களான கண் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவா, RBSK மருத்துவர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், UDID Card பதிவு செய்தல், உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மூலம் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யவுள்ளனர். முகாம் நடைபெறும் அன்றே உதவி உபகரணங்கள் பெறுவதற்கு தேவையான வருமானச் சான்றிதழ் வருவாய் அலுவலர்கள் வழியாக இணையவழி பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகல் அல்லது புதிய குடும்ப அட்டை (Smart Card) நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் - 6 மற்றும் தேசிய அடையாள அட்டை புதுப்பித்து கொள்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.