பெரம்பலூரில் சிறுபான்மையினர் நல திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நல திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-12-22 14:53 GMT

ஆய்வு கூட்டத்தில் சிறுபான்மையினர் நல ஆணையர் பயனாளி ஒருவருக்கு  நலத்திட்ட உதவி வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் புதிய 15 அம்ச திட்டங்கள் குறித்தும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் குறித்தும், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் கிறித்துவ மகளிர் சங்கங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்தும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் வழங்கும் திட்டம் (2021-22) குறித்தும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் வழங்கும் திட்டம் (2021-22) குறித்தும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கிவரும் விடுதிகள் குறித்தும், விடுதிகளின் பராமரிப்பு குறித்தும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் விடுதிகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுவது குறித்தும் விரிவாக ஆய்வு செய்தார்.

மேலும் விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா சலவை பெட்டி, விலையில்லா தையல் இயந்திரம், கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை (2021-22) வழங்கும் திட்டங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உபகரணங்கள் குறித்தும், மேலும் நிலுவையிலுள்ள பயனாளிகளின் விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கும் திட்டம் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடைகள் சரியான அளவில் தைத்து வழங்கப்படும் விவரங்கள் குறித்தும், ஜெருசலேம் புனித பயணம் மற்றும் கிறித்துவ தேவாலயங்கள் பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு வழங்கும் நிதி உதவிகள் குறித்தும், தமிழ்நாடு வக்பு வாரியம், நரிக்குறவர் நல வாரியம் செயல்பட்டு வரும் விதங்கள் குறித்தும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் குறைதீர்க்கும் மனுக்கள் ஆகிய மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 2 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டிகளை மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் துரை.ரவிச்சந்திரன்  வழங்கினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(கட்டிடம்) ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரமணகோபால், துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News