நிலுவை தொகை வழங்க கோரி பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிலுவை தொகையை உடனே வழங்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-10-13 10:20 GMT
நிலுவை தொகை வழங்க கோரி பெரம்பலூரில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  நிலுவையில் உள்ள பால் பாக்கி தொகையை வழங்க கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் கொடுத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முகமது அலி கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. எல்லா கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் பாலை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குகின்றனர். ஆவின் நிர்வாகமானது கூட்டுறவு சங்கங்களுக்கு பணம் வழங்கி வந்தனர்.

இதனிடையே 3 மாதம் காலமாக பால் உற்பத்தியாளர்கள் வழங்கிய பாலுக்கு ஆவின் நிர்வாகம் பணம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை சமயத்தில் பால் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளதால் எதிர் வரும் அக் - 20 ம் தேதிக்குள் பால் பாக்கி தொகை வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை என்றால்  20 ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும்.

மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பாக்கி வழங்காத இந்த நெருக்கடிக்கு தமிழக அரசு தான் காரணம். நுகர்வோருக்கு 3 ரூபாய் குறைத்து ஆவின் பால் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் ஆவின் நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதால் அந்த நஷ்டத்தை பால் உற்பத்தியாளர்களிடம் ஈடு கட்ட கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News