பெரம்பலூர்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-03-02 14:12 GMT

பெரம்பலூர் அருகே மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா மற்றும் மயானக் கொள்ளை திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

இதில் குடியழைத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக் கொள்ளை நடைபெற்றது. அப்போது மருளாளி வேடமிட்டவர்கள் ஆட்டின் குடலை உருவி மாலையாக போட்டுக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து காளிவேடமிட்டவர்கள் முறத்தால் அடிக்கும் நிகழ்ச்சி மற்றும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமணத்தடை பட்டவர்கள், பயந்த நிலையில் உள்ளவர்கள் என பலர் கலந்து கொண்டு காளியிடம் முறத்தால் அடிவாங்கினர்.

தொடர்ந்து மயானத்தில் அரவான் உருவம் மீது அரிசி சாதம் கொட்டி அதில் ஆடு, கோழி பலியிட்டு ரத்தம் கலந்த சாதத்தை அள்ளி வீசினர். இந்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்துகொண்டு மடியேந்தி வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் மடியேந்தி சாதத்தை வாங்கி சாப்பிட்டனர்.

இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.முற்காலத்தில் கடும் கோபம் அடைந்த அங்காளபரமேஸ்வரி அம்மன், உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு, ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது அங்காளபரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த, சிவன் ருத்ர நடனமாடி, அம்மனை சங்கலியால் கட்டி போட்டார்.

அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன், ஆண்டுதோறும், மகாசிவராத்திரி விழாவுக்கு அடுத்து வரும் அமாவாசை தினத்தில், அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு, உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, மாசி மாத அமாவாசை தினத்தில், மயான கொள்ளை விழாவை பொதுமக்கள் கோலாகலமாக நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News