பெரம்பலூர் மாவட்டத்தில் நிரம்பிய ஏரிகளில் ஆட்டம் போடும் சிறுவர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் மழை நீரால் நிரம்பிய ஏரிகளில் சிறுவர்கள் குதித்து விளையாடி ஆட்டம் போட்டனர்.;
பெரம்பலூர் மாவட்டத்தில் மழை நீரால் நிரம்பிய ஏரிகளில் சிறுவர்கள் ஆட்டம் போட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 73 ஏரிகள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.பெரம்பலூர் தாலுகாவில் 18 ஏரிகளும் , குன்னம் தாலுகாவில் 27 ஏரிகளும் , வேப்பந் தட்டை தாலுகாவில் 28 ஏரிகளும் உள்ளன . இவை தவிர 40 - க்கும் மேற்பட்ட சிறிய தடுப்பணைகளும் உள்ளன . இவற்றில் பூலாம்பாடி பொன்னேரி , வெங்கலம் பெரிய ஏரி , குரும்பலூர் ஏரி , செஞ்சேரி ஏரி பெரம்பலூர் பெரிய ஏரி, துறைமங்கலம் ஏரி உள்பட 45 ஏரிகள் நிரம்பி வழிகின்றன .
குரும்பலூர் மற்றும் செஞ்சேரி ஏரி களில் இருந்து மழை வெள்ளநீர் பெருக்கெடுத்து வருவதால் அரணாரை நீலியம்மன் ஏரி நிரம்பியது . மேலும் விளாமுத்தூர் மருதையாற்றில் வழிந்தோடும் வெள்ள நீர் துறைமங்கலம் பெரியஏரிக்கு வாய்க்கால் மூலம் திருப்பி விடப்படுவதால் துறைமங்கலம் பெரிய ஏரி நேற்று நிரம்பியது . பெரம்பலூரில் உள்ள பெரிய ஏரி மற்றும் வெள்ளந் தாங்கி அம்மன் ஏரி ஆகியவை முழுமையாக நீர் நிரம்பி உள்ளதால் தண்ணீர் வாய்க்கால் வழியாக மருதை ஆற்றில் வழியாக செல்கிறது. இதனை பொதுமக்கள் பூஜை செய்து பூக்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
இதனால் விவசாய நிலங்களில் உள்ள வயல்களில் இருக்கும் கிணறு கள் அனைத்தும் நிரம்பி உள்ளன இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர், மேலும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பெரம்பலூர் பகுதியில் வாய்க்காலில் தண்ணீர் ஓடுவதால் இளைஞர்கள் சிறுவர்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நீராடி செல்கின்றனர்.
இருப்பினும் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு வரக்கூடும் என்பதால் நீர்நிலைப் பகுதிகளில் சிறுவர்கள், பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்து இருந்தாலும் தற்போது ஏரிகளில் அதிக அளவு கருவேலமரங்களை காணமுடிகிறது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.