எல்லை தாண்டி வசூல்வேட்டை: தலைமை காவலர் சஸ்பென்ட்

பெரம்பலூர் தலைமை காவலர் கடலூர் எல்லையில் வாகனஓட்டிகளை மறித்து பணம் பறித்த புகாரில் பணியிடைநீக்கம்;

Update: 2021-06-22 13:54 GMT

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே போலீஸ் உடை அணிந்த ஒருவர் வாகனஓட்டிகளை மறித்து பணம் வசூலிப்பதாகவும், கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கேட்டால் மிரட்டுவதாகவும் திட்டக்குடி போலீசாருக்கு புகார் வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமம் அருகே தலைமை காவலர் ஒருவர் வாகன சோதனை மற்றும் கடைகளில் வசூல் வேட்டை நடத்துவதாக தகவலறிந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் நேரில் சென்று அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

அவரை ஸ்டேஷன் வரைக்கும் வாருங்கள் என திட்டக்குடி போலீசார் அழைத்ததும், அந்த நபர் என்னை நீங்கள் விசாரிக்க முடியாது, என்னுடைய வண்டியையும் தொடக்கூடாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இரு மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க திட்டக்குடி போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதையறிந்த அந்த நபர் காலில் விழுகிறேன், என்னை விட்டுவிடுங்கள் எனக் கெஞ்சினார். பின் விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் ரவிச்சந்திரன் என்பதும், பலமுறை ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர் என்றும் தெரிந்தது.

இதையடுத்து அவரை திட்டக்குடி டி.எஸ்.பி.,அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். பின்னர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து ஒப்படைத்தனர்.  பின்னர் அவரை பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. மணி சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டார்.

Tags:    

Similar News