பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் மீட்பு

பெரம்பலூர் நகைக்கடை உரிமையாளரிடம் கொள்ளையடிக்கப்பட்ட கார் 3 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.;

Update: 2021-11-30 06:26 GMT
கொள்ளையர்கள் விட்டுச்சென்ற காரை போலீசார் மீட்டனர்.

பெரம்பலூர் நகரில் எளம்பலூர் சாலையில், நகைக்கடை நடத்தி வருபவர் கருப்பண்ணன் (65). இவர் கடந்த 26ம்தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 3 பேர், கருப்பண்ணன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் இருந்த 105 சவரன் தங்க நகைகளையும், 9 கிலோ வெள்ளி பொருட்களையும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துச்சென்றனர்.

இதுமட்டுமின்றி,கருப்பண்ணனின் வீட்டு வாசலில் நின்றிருந்த சொகுசு காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் நகர போலீசார், வழக்கு பதிந்து, 9 பேர் கொண்ட தனிப்படை குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களுக்கும் சென்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற போது எடுத்துச்சென்ற கார் பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில் தனியாக கடந்த 3 நாட்களாக நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் காரை மீட்டு, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளையர்கள் காருடன் வெளி மாவட்டத்திற்கு தப்பிச்சென்று விட்டதாக கூறி, பல்வேறு மாவட்டங்களில் போலீசார் முகாமிட்டு தேடி வந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கார் நிறுத்தப்பட்டிருந்தது பொதுமக்களிடையே அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News