பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை மறியல்
பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகிலுள்ள அன்னமங்கலம் பஞ்சாயத்திற்குட்பட்ட விசுவ குடி கிராமத்தினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பே பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது., இதனிடையே கடந்த இரு தினங்களாக வேப்பந்தட்டை வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நேரில் வந்து பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளைஅருகிலிருந்து செய்துமுடித்துள்ளனர்.
இதற்கிடையில் திடீரென நேற்று ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது கிராமத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜல்லிக்கட்டு விழா நடத்த ஒரு வார காலத்திற்கு முன்பே வெளிமாவட்ட காளைகளுக்கு பாக்குவைத்து அழைப்புவிடுத்திருந்த நிலையில் நேற்று இரவு திடீரென ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ,வெளி மாவட்ட காளைகளை வண்டிகளில் ஏற்றிவந்தவர்கள் பாதியில் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திடீரென மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு விழாவிற்கு அனுமதி மறுத்துள்ளதை கண்டித்து இன்று காலை விசுவ குடிகிராமத்தினர் பெரம்பலூரிலிருந்து பிள்ளையார் பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு காளையுடன் வந்துமறியலில் ஈடுபட்டுள்ள கிராம மக்களிடம் வருவாய்துறையினர் , பெரம்பலூர் டி.எஸ்.பி. சஞ்சீவ் குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.