சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி: 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

பெரம்பலூர் அருகே சில்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

Update: 2022-02-07 13:51 GMT

சில்லக்குடி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி. 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராமத்தில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்தப் போட்டியை இந்திய விலங்குகள் நலவாரிய பொறுப்பு அலுவலர் மரு.எஸ்.கே.மிட்டல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி,  வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாடு பிடி வீரர்களும் முறையாக பெயர் பதிவு செய்யப்பட்டு, மூன்று கட்டங்களாக மாடு பிடி வீரர்கள்  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க களமிரக்கப்பட்டனர். மேலும் மாடு பிடி வீரர்களின் உடல்தகுதி குறித்து மருத்துவக்குழுவினர் முழு ஆய்வு செய்த பின்னரே, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

கால்நடை பராமரிப்புத்துறையினர் மூலமாக போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கு போதைப்பொருள் ஏதும் தரப்பட்டுள்ளனவா, போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவான உடல் தகுதி பெற்றுள்ளதா என்று சான்றளிக்கப்பட பின்னரே மாடுகள் போட்டியில் கலந்துகொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்ற போட்டியில் 300 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவகுழுவினர் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் இருந்தனர். சிறு காயங்கள் ஏற்பட்டாலும் மருத்துவ குழுவினர் உடனடியாக களத்திற்குள் சென்று சிகிச்சை அளித்தார்கள்.  அவசரகால  நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் தேவையான மருந்துப் பொருட்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.

பார்வையாளர்களுக்கான நடமாடும் கழிப்பிடவசதி தனித்தனியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 250க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீயணைப்புத் துறையினர், மின்சார வாரியத்துறையினர், பொதுப்பணித்துறையினர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து இப்பணிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News