காட்டு வெள்ளம் கோழிப்பண்ணைக்குள் புகுந்ததால் 2 ஆயிரம் கோழிகள் பலி
வேந்தட்டை அருகே காட்டு வெள்ளம் கோழிப்பண்ணைக்குள் புகுந்ததால் 2 ஆயிரம் கோழிகள் தண்ணீரில் மூழ்கி பலியாகின.;
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் ஓடை உடைப்புகளில் தண்ணீர் பெருக்கு ஏற்பட்டு குளங்கள், கிணறுகள் ஏரிகள் நிரம்பி வழிந்து வருகின்றன.
இன்று அதிகாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி கலையரசி (வயது 38)என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணைக்குள் வயல் வெளி பகுதிகளில் திரண்ட காட்டு வெள்ளம் புகுந்ததால் பண்ணை இருந்த சுமார் 4 ஆயிரம் கோழிகளில் 2 ஆயிரம் கோழிகள் தண்ணீரில் மூச்சு திணறி இறந்து விட்டன .மேலும் ஆயிரம் கோழிகள் உயிருக்கு போராடி கொண்டு உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நெய்க்குப்பை கால்நடை மருத்துவர் குணவதி ஆய்வு செய்தார். அனுக்கூர் வி.ஏ.ஓ. வரதராஜன் மதிப்பீடு செய்து வருகிறார். இது பற்றி மங்கலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் பள்ளமான பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு, மக்காச்சோளம், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வருகின்றன.