பெரம்பலூரில் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
பெரம்பலூரில் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது.;
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வளர்ச்சித்திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குநருமான அனில் மேஷ்ராம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியாமுன்னிலையில் நடைபெற்றது.
ஆய்வின்போது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் இயந்திரப் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, ஆவின், கூட்டுறவுத் துறை, மாவட்ட வழங்கல் துறை, மருத்துவத் துறை, சுகாதாரத் துறை, குடிசை மாற்று வாரியம், இ.சேவை மையம், நகராட்சி, மாவட்ட மைய அலுவலகம், வருவாய்த் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட கல்வித் துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சிறப்புத் திட்ட செயலாக்கம் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், வேளாண்மைத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விதைகள் மற்றும் உரங்களின் நிலவரம், இருப்பு நிலை, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இடுபொருட்கள், இயந்திர தளவாடங்கள், நிர்ணயிக்கப்பட்ட அளவு, எய்திய அளவு, நிலுவைக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கூட்டுறவுத்துறை மற்றும் வேளாண் கடனுதவி வழங்கப்பட்ட விபரங்கள், பொது சேவை மையங்கள், பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நபார்டு வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குநருமான அனில் மேஷ்ராம் தெரிவிக்கையில், தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். ஒவ்வொரு துறையினரும் மற்ற துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து ஒருமித்து செயல்படும் போது அரசின் திட்டங்களின் பயன்கள் விரைந்து பயனாளிகளை சென்றடையும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சீரான முறையில் குடிநீர் வழங்கிட வேண்டும். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்றிட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) லலிதா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ச.கருணாநிதி உள்ளிட்ட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.