தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு போட்டி
தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர்களிடையேயும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு போட்டி
இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட ஜனவரி-25 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்பேரில் வாக்காளர்களிடையேயும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வும், கல்வியும் வழங்கிடும் பொருட்டு பல்வேறு போட்டிகள் நடத்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 9 முதல் 12 வகுப்பு பள்ளி மாணாக்கர் அளவிலும், கல்லூரி அளவிலும் தேர்தல் தொடர்பான கருத்துருக்களை மையமாக கொண்டு ஓவிய போட்டிகள், சுவரொட்டி உருவாக்கம் செய்தல், ஒரு வரி முழக்கம் உருவாக்கம், பாட்டு போட்டி, குழு நடன போட்டிகள் மற்றும் கட்டுரை போட்டிகள் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் எதிர்வரும் 15.12.2021 அன்று துவங்கி 25.12.2021 அன்று வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன.
இது தவிர 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 'ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு" என்ற தலைப்பில் தமிழில் 200 வார்த்தைகளுக்கு மேற்படாமல் தங்களது ஒரு பக்க கட்டுரையை எழுதி www.elections.tn.gov.in/sveep2022/ என்ற இணைய முகவரியில் 26.12.2021-க்குள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள், இந்த தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்று தங்கள் கட்டுரைகளை பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.