பெரம்பலூர் கிணற்றில் பள்ளி மாணவி சடலம் : கொலையா? போலீசார் விசாரணை
பெரம்பலூர் கிணற்றில் பள்ளி மாணவி சடலமாக கிடைத்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட கே. புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமராசு (55) விவசாயி இவரது மகள் இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். ராமராசுக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர்.
ராமராசு நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் அனைவருடன் திருப்பதி சென்று வந்தார்.இன்று மதியம் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே சென்று வருகிறேன் என்று கூறி சென்றுள்ளார் அவரது மகள். மாலை வரை வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோர் மகளை தேடி வயல்வெளி பக்கம் சென்றுள்ளனர்.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது தரைக் கிணறு மேல் கட்டையில் மகளின் செருப்பு, கண்ணாடி, கை கடிகாரம் இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வேப்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வேப்பூர் தீயணைப்பு துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி சுமார் மூன்று மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு சடலத்தை மீட்டனர்.
தகவலறிந்த மங்களமேடு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்துகொண்டார அல்லது தவறி கிணற்றில் விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.