பெரம்பலூரில் போலி தங்க காசு கொடுத்து ரூ.8.30 லட்சம் மோசடி செய்த இருவர் சிக்கினர்

பெரம்பலூரில் போலி தங்க காசு கொடுத்து ரூ.8.30 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2022-02-25 14:52 GMT

போலி தங்க காசு (பைல் படம்)

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரத்தை சேர்ந்தவர் வரதராஜன்(38). இவர் கடந்த 16ம் தேதி பெரம்பலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று மேலாளர் விஜயசாந்தியிடம் தன்னிடம் 8 கிராம் எடையுள்ள 23 தங்க காசுகள் இருப்பதாகவும், அதனை விற்பனை செய்ய வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக 3 காசுகளை வரதராஜன் இரண்டாக வெட்டி காண்பித்துள்ளார். இதை நம்பி சரியாக சோதனை செய்யாமல் 23 காசுகளையும் பெற்றுக்கொண்டு வரதராஜனுக்கு ரூ.8 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அந்த தங்க காசுகளை பெங்களூருவில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு இதனை பரிசோதித்தபோது தங்க முலாம் பூசப்பட்ட போலியான காசுகள் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் டிஎஸ்பியிடம் மேலாளர் (பொறுப்பு) பழனிச்சாமி புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வரதராஜனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் செட்டிகுளத்தை சேர்ந்த பாலமுருகன்(30) என்பவரின் ஆலோசனையின்பேரில் தங்க முலாம் பூசப்பட்ட காசுகளை விற்பனை செய்ததாக கூறினார். இதனையடுத்து வரதராஜனையும், பாலமுருகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News