நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை
நாகையில் இருந்து இலங்கைக்கு 10ம் தேதி முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது;
நாகையில் இருந்து இலங்கைக்கு வருகின்ற 10ஆம் தேதி முதல், பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. ஒரு நபருக்கு ரூ. 6,500 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் செய்து, 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன், ஏசி வசதியுடன் கொச்சினில் தயாரிக்கப்பட்ட ‘சிரியாபாணி‘ கப்பல் இன்று 7 ஆம் தேதி நாகை துறைமுகம் வரவுள்ளது
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து மத்திய அரசு வழங்கிய ரூ.3 கோடி நிதியில் நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தும் முயற்சி தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டது.
குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. மேலும், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பணியாற்றுவதற்காக பாஸ்போர்ட் சோதனை செய்வது, பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்வது என பல்வேறு பணிகளில் பணியாற்றும் அதிகாரிகள் டெல்லி சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை சென்று வர, கப்பலுக்கு 6 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுவதால் பயணிகளுக்கான கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ. 6,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில், இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளதால் 3.30 மணி நேரத்தில் கப்பல் மூலம் இலங்கை சென்றடைய முடியும்.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சி துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட ‘சிரியா பாணி‘ என்ற கப்பலில், 150 பயணிகள் பயணிக்கும் வகையில் கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்று 7 ஆம் தேதி சனிக்கிழமை இந்த கப்பல் வர உள்ளது. கப்பலின் முதல் சோதனை ஓட்டம் 8 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சோதனை ஓட்டத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்கள் மட்டும் பயணம் செய்ய உள்ளனர்.
பின்னர் 10 ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து முறைப்பட்டி துவங்க உள்ளது. ஓகங குடச்டிடு KPV Shaik Mohamded Rowther என்ற தனியார் நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்துள்ளது. இவர்கள் தான் 50 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் கோலாலம்பூர் சென்று வந்த State of Madras, S S Rajula மற்றும் M V சிதம்பரம் ஆகிய கப்பல்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துறைமுக நகரம் என்றழைக்கப்படும் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கை நாட்டிற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதற்கு, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.