இப்படியும் அரசு மருத்துவமனையா? ப.சிதம்பரம் பூரிப்பு
மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை பற்றி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பர் வியந்து பாராட்டி உள்ளார்.
மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை குறித்து நாளிதழில் வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி, ‘‘இப்படி ஒரு அரசு மருத்துவமனையா? என்று மனதுக்குள் வியந்துபோனேன், உள்ளம் பூரித்தேன்,’’ என்று மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மதுரை தோப்பூரில் கடந்த 1960-ம் ஆண்டு காமராஜரால் தொடங்கி வைத்த அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த அரசு காசநோய் மற்றும் தொற்றுநோய்களுக்கான அரசு மருத்துவமனை உள்ளது.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த மருத்துவமனை, பாழடைந்த கட்டிடமாகவும் துருப்பிடித்த படுக்கைகளும், அதன் வளாகம் மரங்கள் இல்லாத சூழலால் பாலைவனம் போலவும் காணப்பட்டது. மக்கள் ‘காட்டாஸ்பத்திரி’ என்றே அப்போது அழைத்தனர்.
இந்த மருத்துவமனையின் நிர்வாக அதிகாரியாக (ஆர்எம்ஓ) மருத்துவர் காந்திமதிநாதன் வந்தபிறகு பாலைவனமாக இருந்த மருத்துவமனை வளாகம், சோலைவனமாக மாறியதாக தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை பற்றி புகைப்படங்களுடன் மதுரை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 27-ம் தேதி சிறப்புக் கட்டுரை வெளியானது.
இறப்பின் தருவாயில் இருக்கும் காசநோயாளிகளும், பிற தொற்றுநோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கனிவான சிகிச்சை, ஆறுதலான வார்த்தைகள் மட்டுமே தேவையாக இருக்கிறது. அதனை இந்த மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு வழங்குகிறார்கள்.
இந்தச் செய்தியைப் படித்த மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்ததோடு, அந்த மருத்துவமனை நிர்வாக அதிகாரி மருத்துவர் காந்திமதிநாதனைப் பாராட்டியுள்ளார். இவர் இந்த மாதத்துடன் ஓய்வு பெறும்நிலையில் அவருக்கு நிகரான சேவை மனப்பான்மையுடன் கூடிய ஒருவரை நியமிக்கும்படி, தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்த தகவல் வருமாறு:
27-6-2024 தேதியிட்ட 'இந்து தமிழ் திசை' நாளிதழின் 6-ம் பக்கத்தில் மதுரை தோப்பூரில் அமைந்துள்ள காச நோய் மற்றும் தொற்று நோய்கள் அரசு மருத்துவமனையைப் பற்றிய கட்டுரையைப் படித்து உள்ளம் பூரித்தேன்.
இதன் தலைமை மருத்துவர் 11 ஆண்டுகளில் கொண்டு வந்த சீர்திருத்தங்களைப் பற்றி அறிந்து எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள். இப்படி ஓர் அரசு மருத்துவமனையா? என்று வியந்து மனதுக்குள் பாராட்டினேன்.
மருத்துவர் காந்திமதிநாதன் 30-6-2024 அன்று பணி நிறைவு பெறுகிறார் அவருக்கு ஈடான அர்ப்பணிப்புள்ள தலைமை மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்புடன் கோருகிறேன். (மருத்துவர் காந்திமதிநாதனை எனக்குத் தெரியாது), ’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் இந்தப் பதிவு, அரசு மருத்துவமனை வட்டாரத்தில் அதிகம் பகிரப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர் அனைவராலும் பாராட்டப்படுகிறார்கள். மேலும், எக்ஸ் தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.